Header Ads

தெறி படத்தை திரையிடாதது ஏன்?: தியேட்டர் அதிபர்கள்

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தெறி பட விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
விஜய் நடித்துள்ள தெறி படத்தை திரையிடுவதில் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். தாணுவின் தவறான அணுகுமுறையால் தான், தெறி படம் நிறுத்தப்பட்டது.
இந்த படத்தை சதவீத அடிப்படையில் முன்பணம் கொடுத்து, வழக்கமான நடைமுறையில் திரையிட தயாராக இருந்தோம். கடந்த 2 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்டத்தில் சதவீத முறையில் தான் படங்களை திரையிட்டு வருகிறோம். இதன்மூலம் பெரிய தொகையை வசூல் செய்து தயாரிப்பாளர்களுக் கும், விநியோகஸ்தர்களுக்கும் அளித்து இருக்கிறோம்.
ஆனால், எஸ்.தாணு தெறி படத்தை செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் எம்.ஜி. முறை அடிப்படையில் தான் திரையிட வேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு திரையரங்கிற்கும் ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. இதனை நாங்கள் ஏற்கவில்லை.
சதவீத முறையில் தான் படத்தை திரையிடுவோம் என்று கூறினோம். இதனால் அவர் படத்தை தரவில்லை. சென்னை நகர திரையரங்குகளுக்கும், செங்கல்பட்டில் உள்ள மல்டி பிளஸ் தியேட்டர்களுக்கும் 50 சதவீத அடிப்படையில் திரைப்படத்தை அளித்த அவர் எங்களுக்கு மட்டும் எம்.ஜி. முறையில் 75 சதவீதம் வேண்டும் என்று கேட்பது என்ன நியாயம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், வரும் காலங்களில் திருமண மண்டபங்களில் திரைப்படங்களை திரையிட போவதாக அறிவித்துள்ளனர். லட்சக்கணக்கில் திருமண மண்டபத்துக்கு வாடகை கொடுத்து படத்தை வெளியிடுவதாக கூறுவது பழிவாங்கும் செயலாகும். செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புதிய படங்களை திரையிட தரமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 20-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
எஸ்.தாணு, டி.சிவா மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரின் செயல்பாடுகளை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Powered by Blogger.